புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்ப் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 243 கோயில்களின் தகவல்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை முறையைப் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு யூனியன் பிரதேசங்களில் முதல் முறையாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
மக்கள் இந்த இணையதளத்திலிருந்து 243 கோயில்களின் நிர்வாகம், வரவுகள், செலவுகள், பூஜைகள், திருவிழாக்கள், அசையும், அசையா சொத்துகள் விவரங்கள், நன்கொடைகள், திருப்பணிகள் மற்றும் விதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். சுவாமி தரிசனம், பூஜை, திருவிழாக்களையும் பார்க்கலாம்.
இணைய முகவரி: http://hri.py.gov.in
இந்த இணையத்தைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தொடங்கி வைத்துப் பேசுகையில், "இந்தியாவில் யூனியன் பிரதேசங்களில் முதல் முறையாக கோயில்களுக்காக இத்தகைய இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது மதச்சார்பின்மையோடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்ப் பெயரில் உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு என்னென்ன தகவல் உள்ளது என்பதும் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த இணையதளம் உருவானது. இந்த இணையதளம் ஆன்மிக சுற்றுலாவை வளர்க்கவும், வருவாயைப் பெருக்கவும் உதவும்" என்று குறிப்பிட்டார்.