ஆப்கானிஸ்தான், இந்தியாவிற்கு அருகே அமைந்துள்ள ஒரு நாடு. இதற்கு தெற்கே பாகிஸ்தானும், மேற்கில் துருக்கியும், வடக்கில் உஸ்பெகிஸ்தானும், தூரகிழக்கில் ஈராக்கும் அமைந்துள்ளன. 33 பில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடு ஆப்கானிஸ்தான். இதன் தலைநகரான காபூலில், ‘தர்காபீர் ரதன்நாத்’, மற்றும் ‘நரசிங்கத்வரா’ ஆகிய பகுதிகளில் அருள்மிகு மகாவிநாயகருக்கு இரண்டு திருக்கோயில்கள் அமைந்துள்ளன. கர்டேஜ் என்னும் நகரம் காபூலில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ளது. இங்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் பண்டைய ஒற்றுமைக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கர்டேஜ் அருகிலுள்ள மீர்சாகா என்னும் ஊரின் நதிக்கரையில் சுமார் 12,000 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை ஒஸ்தும்பரல் சிற்றரசு, குஷான மற்றும் ஷாஹி அரசு நாணயங்களும், இந்திய-கிரேக்க நாகரிகத்தை விளக்கும் நாணயங்களும் காணப்பட்டன. இந்த நாணயங்கள் சிலவற்றில், சூலம் தாங்கிய ஆண், பெண் உருவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நாணயங்கள் ஷாஹி அரசர்களால் வெளியிடப்பட்டவை என்று தெரியவருகிறது. காஷ்மீர் நாட்டின் கல்ஹணர் என்னும் அரச மரபில் மிக மூத்தவரான நரேந்திராதியன் என்னும் மன்னனுக்கு கிங்கிளன் என்ற பெயரும் உண்டு. கி.பி. 6ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட நாணயங்களில் கிங்கி என்ற அவர் பெயர் குறிப்பிடப்பெற்றுள்ளது. கி.பி. 200-220ல் இரண்டாம் கனிஷ்கா என்னும் குஷன அரசன் வெளியிட்டுள்ள தங்க நாணயத்தில் ஒருபுறம் இவ்வரசனின் மிடுக்கான முரட்டுத்தனமானத் தோற்றம் இடம் பெற்றுள்ளது. சுருண்ட கேசம் கொண்ட தலையில், விலை உயர்ந்த கற்கள் பதித்த மணிமகுடம் அணிவிக்கப்பெற்றுள்ளது. காலிரண்டையும் அகட்டி நின்றபடி ஒரு பக்கம் திரும்பியுள்ளான் அவன். வலது கை ஒரு மனிதனின் தலை மீது பதிந்துள்ளது. அந்த மனிதன் மன்னரை வணங்கியபடி காணப்படுகின்றான். அரசனின் இடது கை ஒரு திரிசூலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. வலதுபுறம் வெண்கொற்றக் குடையும், அதன் இருபுறமும் நாகங்களும் இடம் பெற்றுள்ளன.
நாணயத்தின் பின்புறத்தில், அன்பே சிவம் என்னும் கருணை ஒளியிட சிவபெருமான் நின்றபடி காட்சியளிக்கிறார். விரிந்த சடாமுடியுடன், நாட்டியக் கலைஞன் என்ற வகையில் உடலை நளினமாக நெளித்திருக்கிறார். சற்றே வளைந்துள்ள திரிசூலத்தை இடக்கரம் பற்றி இருக்க, வலது காலை முன் வைத்திருக்கிறார். இடது காலை ஒயிலாக வளைத்தபடி ரிஷப வாகனத்தின் முன்னே நின்றிருக்கிறார். ரிஷபமும், இறைவனின் வலதுகரம் இதமாகத் தன்னை வருடுவதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்வது போல் பணிந்து நிற்கிறது. காளையின் வாய் அருகே பூத கணம் ஒன்றின் முகம் உள்ளது. காளையின் மேல்புறம் சந்திரன், சூரியன், மலை முகடுகள், அதிலிருந்து கங்கை ஓடிவரும் காட்சி ஆகியன இடம் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தானம் வேத கலாசாரம் திகழ மிளிர்ந்திருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்து மக்கள் உலகில் பல்வேறு இடத்திலும் பரந்து வாழ்ந்த நிலையையும், இந்து அரசனே உலக அரசனாக இருந்ததையும், சைவ சமயமே மேலோங்கி செல்வாக்குப் பெற்றிருந்ததையும் அறிய முடிகிறது.
கி.பி. 850ல் லகடொர்மா என்னும் பெருமன்னனின் மந்திரியான கள்ளரென்னும் வேதியன், காபூல் ஷாஹி, பராஹ்மண ஷாஹி, ஹிந்து ஷாஹி, காபூல் ராயன்கள் என இந்த நான்கு வம்சங்களையும் ஒரே வம்சமாக்கி ஷாஹி வம்சம் என அழைத்து கர்டேஜை தலைநகராகக் கொண்ட ஒரு பகுதியில் ஆட்சி புரிந்துவந்தான். கி.பி. 871ல் சாமந்ததேவ என்னும் ஷாஹி மன்னனை சப்பரித் என்னும் இஸ்லாமிய வம்சத்தினனான யாகுப்-பின்-லைத் என்னும் வல்லரசன் போரில் வென்று காபூலை விட்டு விரட்டியடித்தான். தோற்ற மன்னன் காபூலுக்கு 70 மைல் தெற்கேயுள்ள கர்டேஜில் புது அரண்மனை கட்டிக் கொண்டு ஆட்சி அமைத்தான். கி.பி. 878ல், ஆம்ரோபின்லைத் என்பவனால் அங்கிருந்தும் ஷாஹி மன்னன் விரட்டப்பட்டான். பிறகு இந்த மன்னனும் இவனது வம்சாவழியினரும் நதிக்கரையில் ஓர் ஊரினை உருவாக்கி ஆளத் தொடங்கினர். அந்த நதியே, இந்து (சிந்து) நதி; தலைநகர், உஹிந்து என்னும் ஊராகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கர்டேஜில் சலவைக் கல்லால் ஆன அழகிய விநாயகர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பீடத்துடன் சேர்த்து 28 அங்குல உயரம், 14 அங்குல அகலம் கொண்டது. இத்திருமேனி கிரேக்க-இந்து சிற்ப கலையின் கூட்டு அம்சமாகத் திகழ்கிறது. கி.மு. 2ம் நூற்றாண்டு கிரேக்க சிற்பக் கலையின் ஒரு சாட்சியாக அந்த சிலை கருதப்படுகிறது. கிரேக்க சிற்ப பாணியில் பரந்த மார்பும், உடற் கட்டுகளுடன், தூண் போன்ற கை, கால்களுமாக அமைந்துள்ளார் இந்த விநாயகர். ஒரு யானையின் கம்பீரம் மற்றும் பலத்தோடு, வல்லப விநாயகராக வனப்பு மிகுந்த வாலிபன் போன்ற மிடுக்கோடும் மிளிர்கிறார். தும்பிக்கை இடம்புரியாக உள்ளது. இடப்புற தந்தம் முறிந்துள்ளது. இரண்டு காதுகளும் இலை அல்லது பறவையின் விரிந்த சிறகினைப் போல விரிந்து தோள்களில் பரந்துள்ளன. திருக்கரங்கள் நான்கு ஒடிந்திருக்கின்றன. சிரசில் அழுத்தமான சின்னஞ்சிறு மகுடம், கழுத்தில் வளையத்திற்குள் கோர்க்கப்பட்ட கண்டஹாரம், பூணூலாக பாம்பு ஆகியவற்றை அணிந்துள்ளார்.
தொந்திக்குக் கீழே இடுப்பில் அணிந்துள்ள பட்டுத்துணியை, கீர்த்தி முகம் எனப்படும் சிங்கத்தின் முகமும், தாமரை மொட்டுகளும், சிட்டுக்குருவியின் சிறகுகளும் அலங்கரிக்கின்றன. பீஹாரில் செழிப்புடன் வளர்ந்த மகதக்கலையின் உன்னதத்தை இச்சிலை குறிக்கிறது. இத்திருமேனி, கௌசாம்பி நகரத்தில் காணப்படும் ஹர-கெளரி சிற்பங்களைப் போல வல்லப விநாயகராக வடிக்கப்பெற்றது. வரம் தருவதில் வல்லவரான இவர், வாகனமின்றி காணப்படுகின்றார். இவரின் திருநாமம் ‘மஹா விநாயகர்’ என்பதை இவரது பீடத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு சாசனம் தெரிவிக்கின்றது. கி.பி. 7ம் நூற்றாண்டில் தொன்மையான நாகரி லிபி எழுத்தில் நான்கு வரிகள் எழுதப்பட்டுள்ளன. அதன் சாராம்சம்: ‘‘ஓம்! இது ஒரு அரிய, பெரிய சிற்பம். மஹாவிநாயகக் கடவுளுடையது. இச்சிலையை பிரதிஷ்டை செய்தவன், மஹா ராஜாதிராஜன் என்றும், பரமபட்டாரகன் என்றும் புகழப் பெற்ற அரசன் ஷாஹி கிங்களன். இவ்வரசன் தான் செங்கோல் ஏற்ற 8வது ஆண்டிலே, மஹாஜ்யேஷ்ட மாசம், சுக்லபட்சம், த்ரயோதசி திதி, விசாக நட்சத்திரம், சூரியன் ஹம்ஹா மாதத்திலுள்ள புண்ணிய தினத்தன்று பூஜைக்காக பிரதிஷ்டை செய்து அதனால் புகழ் எய்தினான்.’’
இந்த திருமேனியே தற்பொழுது காபூல் வாழ் இந்துக்களால் தர்காபீர் ரதன்நாத் என்னும் இடத்தில் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு விநாயகர் திருமேனி காபூல் நகரிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள ‘ஸகர்தார்’ என்னும் இடத்தில் காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்து சூரியன், சிவன் திருமேனிகளோடு வெளிப்பட்டவர் இவர். இத்திருமேனியின் காலம் குஷானர்கள்-குப்தர்களுக்கு இடைப்பட்ட நான்காம் நூற்றாண்டாகும். இத்திருமேனிகள் யாவுமே சலவைக்கல்லால் ஆனவை. இந்த விநாயகரும் மேலே குறிப்பிடப்பெற்ற விநாயகரையே ஒத்துள்ளது. ‘ஏக தந்தர்’ என அழைக்கப்படும் இந்த மஹா விநாயகருக்கும் ஒரு கை பின்னமாகியுள்ளது. கீழ் இரண்டு கரங்களும் கிரேக்க சிற்ப முறைப்படி, ‘டால்பின்’ என்ற இரண்டு கணங்களின் தலையை தடவி அவற்றின் பக்தியை ஏற்றுக் கொண்டதைத் தெரிவிக்கின்றன. அகான்தாஸ் எனப்படும் கிரேக்க இலை வடிவம் இடுப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த விநாயகர், தற்பொழுது நரசிங்கத்வாரா என்னும் இந்துக்கள் வாழும் பகுதியில் உள்ள பஜாரில் கோயில் கொண்டிருக்கிறார்.