Type Here to Get Search Results !

Ads

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு

 


ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் வளர்பிறை 5ம் நாளில் தொடங்கும், உலக பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா, இன்று மீனாட்சி அம்மன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கடந்த ஆண்டு  கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பு ஏதும் இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா 2வது அலை தொடங்கி, மிக வேகமாக தொற்று பரவி வரும் நிலையில்,   சித்திரை திருவிழா கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்படுகிறது.

எனினும்,  சுவாமி, அம்மன் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, கொரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை பக்தர்கள் இல்லாமல்  முன்னெச்சரிக்கையுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த அருண் போத்திராஜ், உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அடங்கிய நீதிமன்ற பிரிவு,  கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,  கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுவதால், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு, அனுமதி வழங்குஅ இயலாது என மனுவை தள்ளுபடி செய்தனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் வரும் 22ஆம் தேதி  நடக்கும். வரும் 24ம் தேதி காலை 8.45 மணி முதல் 8.50 மணிக்குள் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி  நடைபெறுகிறது. 

கோவில் வளாகத்தில் நடக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சியை காண நேரிடையாக காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கல்யாண நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்படும். எனினும், திருக்கல்யாணம் முடிந்த பிறகு அம்மனை திருமணக்கோலத்தில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.