அயோத்தி- பாபர் மசூதி உண்மையான வரலாறு.
1528-ம் ஆண்டு மார்ச் இறுதியில் அயோத்தி வந்த பாபர் நகருக்கு வெளியே முகாமிட்டிருந்தார். அப்போது தான் அவர் தன்னுடைய தளபதி மீர் பாகியிடம் ராமர் பிறந்த இடமான( ஜன்மஸ்தான்) ராம ஜென்ம பூமியில் உள்ள ராமர் ஆலயத்தை இடித்து விட்டு அதே இடத்தில் மசூதி கட்ட உத்தரவிட்டுள்ளார். இப்படித் தாங்கள் செல்லும் இடங்களிலும், வெல்லும் இடங்களிலும் மசூதிகளைக் கட்டுவதை முகலாய அரசர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.(இதற்கு ஆதாரமாக இருந்த பாபரின் தினசரி நாட்குறிப்பான ‘பாபர் நாமா’ வில் சரியாக 1528 ஏப்ரல் 2 முதல் செப்டம்பர் 18 வரை 5 மாதங்கள் வரையான குறிப்புகள் பின்னாளில் காணாமல் போய் விட்டது.)
பின்னர் 1530-ல் பாபர் இறந்தவுடன் ராமர் கோவில் இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமருக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று எண்ணிய அயோத்தி நகர இந்துக்கள், மசூதி மீதும், மசூதி பொறுப்பாளர்கள் மீதும் ஹுமாயுன்,அக்பர், ஔரங்கசீப் காலத்திலேயே 30 க்கும் மேற்பட்டமுறை தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த சண்டைகளில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியானதையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது.
பின்னர் ஒரு சமாதான ஏற்பாடாக 1883 -ல் மசூதிக்கு வெளியே இந்துக்கள் வழிபடுவதற்கு ‘ராம் சபூதரா’ என்கிற ஒரு தற்காலிக பீடம் அமைக்கப் பட்டது. பின்னர் 1885-ல் மஹந்த் ரகுவர் தாஸ் என்பவர் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ராமர் அவதரித்த இடத்தில் இருந்த ராமர் ஆலயத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தில் மீண்டும் ராமருக்கு ஆலயம் எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடினார்.
வழக்கை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி F.E.A கௌமியர் ‘இந்துக்களுக்கு சொந்தமான புண்ணிய பூமியில் மசூதி கட்டப்பட்டது வருத்தத்திற்கு உரியது. ஆனால் இது 356 வருடத்திற்கு முந்தைய சம்பவம். இப்போது சரி செய்வதற்கான காலம் கடந்து விட்டது’ என்று தீர்ப்பளித்துள்ளார்.
பின்னர் பல்வேறு கலவரங்கள்,தாக்குதல்களால் சேதமடைந்ததால் மசூதி 1934- ஆம் ஆண்டு முதல் மூடி வைக்கப்பட்டதுடன், தொழுகையும் நடைபெறவில்லை. பின்பு 1949 டிசம்பர் 22 -ஆம் தேதி நள்ளிரவில் உள்ளூர் இந்துக்கள் ஆயிரக் கணக்கானோர் திரண்டு ‘ராம் சபூதரா பகுதியில் இருந்த ராமர், சீதா தேவி, லஷ்மணன் சிலைகளை மசூதியின் மையப் பகுதியில் நிறுவியுள்ளனர்.
பின்னர் டிசம்பர் 29-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுப் படி பாபர் மசூதி சர்ச்சைக்குரிய இடம் என்று அறிவிக்கப் பட்டு, நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு, இரும்புகம்பிகளால் வேலி அமைக்கப் பட்டது. ஆனால் வேலிக்கு வெளியே நின்று ராமர் சிலையை இந்துக்கள் வழிபடவும்,பூஜைகள் செய்யவும் அனுமதிக்கப் பட்டனர். ராமர் சிலைக்கு பூஜை செய்ய ஒரே ஒரு பூஜாரியை மசூதிக்குள் அனுமதிக்கவும் வழி செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
பின்னர் 1992 டிசம்பர் 6 ஞாயிற்றுக் கிழமை ஆயிரக்கணக்கான கரசேவகர்களால் 464 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த பாழடைந்த கட்டிடம் தரைமட்டமாக்கப் பட்டது.
நடைபெற்ற வரலாற்று சம்பவங்களை ஆராய்ந்தால் ராமர் கோவில் பிரச்சனை இன்று, நேற்றோ, பாரதிய ஜனதா கட்சியாலோ தொடங்கப்பட்ட பிரச்சனை இல்லை என்பதும் 498 வருடங்களாக தொடர்கிறது என்பதும் தெளிவாகிறது.
படிப்படியான நிகழ்வுகளை சரித்திரப் பின்னணியில் நோக்கும் போது நிச்சயமாக ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் ஆலயம் எழும்பும் என்கிற நம்பிக்கை மலர்கிறது.
ஜெய் ஸ்ரீ ராம்…!